Thursday 11 September 2014

பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்திற்கு கடைசி இடம்
 


சென்னை: மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட                                                    பட்டியல் மூலம், தமிழகம், பொருளாதார வளர்ச்சியில் கடைசி                                             இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.                                                 பின்தங்கிய மாநிலமாக இருந்த பீகார், இரட்டை இலக்க                                                  வளர்ச்சியுடன், முதலிடத்தை பிடித்துள்ளது.


ஒரு மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியை பொறுத்து, அதன் பொருளாதார வளர்ச்சி இருக்கும். உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்றால், தொழில் நிறுவனங்களுக்குள் போட்டி இருக்க வேண்டும். போட்டிக்கான சூழல், கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிறைவான முதலீடுகள் இருக்க வேண்டியது அவசியமாகிறது. மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள, 2012 - 13ம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் பட்டியலில், தொழிற்சாலைகள் பலத்தை அதிகளவில் கொண்ட மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, பீகார் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதுவும், தொடர்ந்து, 2011 - 12ல், 15.03 சதவீதமும், 2012 - 13ல், 10.29 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. தமிழகத்தில், அதிகளவு தொழிற்சாலைகளுக்கு அனுமதி, உள்நாட்டு உற்பத்தி குறித்த பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், தேசிய வளர்ச்சி வீதமான, 4.5 சதவீதத்தை விட குறைவாக, 3.39 சதவீத வளர்ச்சியை மட்டுமே பெற்று, கடைசி இடத்தை பிடித்துள்ளது.பீகாருக்கு அடுத்த இடத்தில், 9.89 சதவீத வளர்ச்சியுடன் மத்திய பிரதேசம்; 9.33 சதவீதத்துடன் டில்லி, மூன்றாம் இடம்; 8.24 சதவீதத்துடன், கேரளா, நான்காம் இடம்; 7.96 சதவீதத்துடன் குஜராத் ஆறாவது இடம்; 6.18 சதவீதத்துடன் மகாராஷ்டிரா, ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.பட்டியல் இடப்பட்டுள்ள, 18 மாநிலங்களில், தமிழகம், கோவா தவிர, மற்ற, 16 மாநிலங்களும், தேசிய வளர்ச்சியை விட, கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளன.