Sunday 21 June 2015

இன்று உலக யோகா தினம்...

ஆசனங்களில் அசத்தும் அதிசயப் பாட்டி!வயசு அதிகமில்லை ஜென்டிமேன்...93!
நானம்மா பாட்டிக்கு வயது 93. 'உருவத்தைப் பார்த்து வயதைக் கணக்கிடாதே’ என்பது நானம்மா பாட்டிக்கு சரியாகப் பொருந்தும். ஆறு அடியை எட்டும் உயரத்தில் ஆரோக்கியமாக வலம் வருகிறார். 50 வகையான யோகாசனங்களை அசாத்தியமாகச் செய்து நம்மை விழி விரியவைக்கிறார்.
நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ள நானம்மாளை சந்தித்தோம். கோவை கணபதியில் வீடு. தேன் கலந்த தண்ணீர் கொடுத்து உபசரித்தார். தாகத்தில் நாம் செம்பை வாயில் கவிழ்க்க, 'மளமளன்னு குடிக்காத கண்ணு! பொறுமையா சுவைச்சுக் குடி' என்று சொன்ன வார்த்தைகளிலேயே, அவர் வாழ்க்கையை எவ்வளவு ரசித்து வாழ்கிறார் என்பது புரிந்தது.
''என் சொந்த ஊர் பொள்ளாச்சிக்குப் பக்கத்தில் இருக்கிற ஜமீன் காளியாபுரம். 1920-ம் வருஷம் பிறந்தேன். எங்க குடும்பத்தில் தொடர்ந்து அஞ்சு தலைமுறையா யோகா செய்துட்டு வர்றோம். என் தாத்தா மன்னார்சாமியிடம், அஞ்சு வயசுல யோகாசனம் கத்துக்க ஆரம்பிச்சேன். கல்யாணமான பிறகும்கூட, தொடர்ந்து பயிற்சி செஞ்சுவந்தேன். எனக்கு ரெண்டு மகன்கள், மூன்று மகள்கள். அஞ்சு பிள்ளைகளுமே சுகப்பிரசவம்தான். எல்லாப் பிள்ளைகளுமே இன்னைக்கு யோகாசன ஆசான்களாக, வேறவேற ஊர்கள்ல இருக்காங்க.
நான் இதுவரை, யோகாசனப் பயிற்சியை எதுக்காகவும் தவிர்த்ததே இல்லை.  எனக்கு எந்த வியாதியும் வந்ததும் இல்லை. இன்னிக்கு வரை ஆஸ்பத்திரி பக்கம் போனதும் இல்லை. யோகாசனம் செய்றதால, என் எலும்பு மூட்டுகள் ரொம்ப வலுவா இருக்கு. யோகா செய்தால், உள்ளுறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கும். கணையம், சிறுநீரகம், இதயம் எல்லாம் முழு பலத்துடன் இயங்குறதால, நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்னை இருந்தாலும், தானாகவே போயிடும். இந்த விழிப்பு உணர்வு நம்ம மக்கள்கிட்ட வரணும்கிறதுக்காகதான் ஊருக்குள்ள எடுத்துச் சொல்லிவர்றேன்.
யோகாசனம் செய்தால், ஆழ்ந்த அமைதி நிலையை எளிதில் பெறலாம். நான் ராத்திரி படுக்கப்போனால், விடிகாலையில்தான் விழிப்பேன். பல் துலக்குறது, குளிக்கிறது மாதிரி யோகாசனத்தையும் தினசரி தவறாமல் செஞ்சுடறதுதான் என்னோட பெரிய பலம்!' - அழகாகச் சிரிக்கிறார் பாட்டி.
உணவுப் பழக்கத்தைப் பற்றி கேட்டதற்கு, ''தினமும் காலையில் வேப்பங் குச்சியை ஒரு கால் மணி நேரம் பல்லுக்குள்ள வெச்சு மென்னுக்கிட்டே இருப்பேன். வேப்பங் குச்சியின் கசப்பு வாயில் இறங்குகிறப்போ, ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிவதோட சர்க்கரை நோய் வர்றதையும் தடுக்கும். காலையில் சூர்ய நமஸ்காரத்தில் தொடங்கி, சில மணி நேரம் ஆசனங்களைச் செய்வேன்.
காலையில் ராகி, கம்பு, மக்காச்சோளம், பாசிப்பயிறு, வரகு, தினை, கோதுமை, சிவப்பு அரிசி, தானியங்கள்னு ஏதாவது ஒண்ணை வறுத்து அரைச்ச மாவில் காய்ச்சிய கூழில் மோர், உப்பு சேர்த்துக் குடிப்பேன். மதியம் சாதம், காய்கறிகள், கீரை, கொஞ்சம் மோர் சேர்த்துக்குவேன். ராத்திரிக்கு ஒரு டம்ளர் பால், ரெண்டு வாழைப்பழம்' என்ற நானம்மாள் பாட்டி, காபி, டீயைத் தவிர்த்துவிட்டு, கருப்பட்டி கலந்த சுக்குக் காபியைத்தான் அருந்துகிறார்.
'செஞ்சுரி’ அடிக்கப்போகும் இந்த வயதிலும், பாட்டிக்குக் கூர்மையான பார்வைத் திறன். 'பூமியில் உள்ள எல்லாமே நம் உடல்ல இருக்கு. நமது சக்திகளின் ஓட்டப்பாதை தடையில்லாமல் போறதுக்கும் உடலைச் சமநிலையில் வெச்சுக்கறதுக்கும் யோகா ஒன்றே தீர்வு'' எனக் கூறும் இந்தப் 'பேரிளம்பெண்’, தன் உடலை ரப்பர் போல வளைத்து சர்வாங்காசனம், மச்சாசனம், யோகமுத்ரா, வஜ்ராசனம், ஹாலாசனம், தூலாசனம், பச்சிமோதானாசனம் என்று மிகச் சிரமமான ஆசனங்களையும் அனாயாசமாகச் செய்து அசத்துகிறார்.
பாட்டியின் சாதனைகள்
  கோவையில் 50 வயதுக்கு உள்பட்டோருக்கான யோகாசனப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றவர்.
  மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் குவித்தவர்.
  சமீபத்தில் அந்தமான் நிகோபர் தீவில் நடைபெற்ற, தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில், 'சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்.
  குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் யோகா பயிற்சியளிக்கும் நானம்மாள், துரித உணவுகளைத் தவிர்ப்பது குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புஉணர்வு முகாம்களை நடத்துகிறார்.
வாழ்த்த வயது இல்லை பாட்டி... வணங்குகிறோம்!