Saturday 17 October 2015

துண்டிக்கப்படும் தொலைபேசி அழைப்புகளுக்கு இழப்பீடு: டிராய் உத்தரவு

செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போது தடைப்பட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் நுகர்வோருக்கு ரூ.1 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வரும் ஜனவரி 1 ஆம் தேதிக்குள் இதனை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும் .டிராய் உத்தரவிட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக செல்போன் இணைப்புகள் பாதியிலேயே துண்டிக்கப்படுவது ’கால் டிராப்ஸ்’ (இஹப்ப் க்ழ்ர்ல்ள்) எனப்படுகிறது. இத்தகைய துண்டிக்கப்பட்ட இணைப்புகளுக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முழு கட்டணம் வசூலித்து வந்தன. இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், துண்டிக்கப்படும் செல்போன் இணைப்புகளுக்கு கட்டாயம் இழப்பீடு வழங்குவது குறித்து டிராய் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 
இதுகுறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்ட அழைப்புகள், ஏற்கப்படாத அழைப்புகளில் இடம்பெறும். இந்த இழப்பீடு நாள் ஒன்றுக்கு 3 முறை தடைப்பட்ட அழைப்புகளுக்கு பெறலாம். அதற்கு மேற்பட்ட அழைப்புகள் துண்டிக்கப்படுவதனால் நுகர்வோர்கள் எந்த இழப்பீட்டை பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், அழைப்பு தடைபட்டால் நுகர்வோருக்கு ரூ.1 இழப்பீடு வழங்க கூடிய இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
மேலும், அழைப்பு தடைபட்டதற்கான வழங்கப்பட்ட இழப்பீடு தொகை குறித்து, அழைப்பு தடை ஆன நான்கு மணிநேரத்துக்குள் எஸ்.எம்.எஸ் அல்லது யூ.எஸ்.எஸ்.டி மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.
போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு, இழப்பீடு தொகை வரவு வைக்கப்பட்டது குறித்து அடுத்த மாத ரசீதில் தெளிவாகவும் தனிக் குறியீடுடனும் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தவிர சேவையில் தரக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளின் கீழ் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் வரை இழப்பீடை வழங்கும்படியான விதிகளை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் விதித்துள்ளது.