Thursday 19 November 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் ஊதிய உயர்வு: சம்பள கமிஷன் பரிந்துரை,



புதுடெல்லி,



மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்கு அதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.



இந்நிலையில், 7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கையை இன்று ஊதிய குழுவின் தலைவர் ஏகே மாத்தூர், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்பித்தார். 900 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் ஊதிய உயவு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும்,  வருடத்திற்கு 3 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கவும், குறைந்த பட்ச ஊதியம் 18 ஆயிரம் அளிக்கவும்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 



மேலும், வீட்டு வசதிக்கடன் 25 லட்சம் வரை வழங்கலாம் எனவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் குழு கேட்டுக்கொண்டுள்ளது. 52 விதமான படிகளை ரத்து செய்யவும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்தினால் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 1.02 லட்சம் கூடுதலாக செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது