Thursday 13 July 2017

ஞானாஞ்சலி
           
நமது தலைவர் ஞானையா!
நம்மை மறந்தது ஏனையா!
நிறை வயது தொண்ணூற்று ஏழு
வாழ்ந்து சிறந்ததும் தொண்ணூற்று ஏழு.

ஆஜானுபாகுவான தோற்றம் - நமது
தலைமைகளின் சிறப்பே அத்தகைய
உருவேற்றம்.
குப்தா -  ஜெகன் - ஞானையா
இந்த கம்பீரம், இன்முகம்
இனி யாருக்கு!

மனித வாழ்க்கையின்
ஒவ்வோர் அங்குலமும்
வாழ்ந்து பார்த்தவர், பெருந்தலைவர்.
இவர் எழுதிய நூல்கள்
எண்ணற்றவை.
உலக அரசியல், வரலாறோடு
உன்னதமான கட்டுரைகள்.
சொல்லித் தந்த பாட வகுப்பு
சொல் வளம் மிகுந்த பேச்சாற்றல்
நாள் பூரா கேட்டோமே!

இயக்கம், கட்சி இன்னபிறவென்று
நடத்திக் காட்டிய போராட்டங்கள்
எண்ணிலடங்கா.  அவையெல்லாம்
ஏற்றம் பெற்ற நிகழ்வுகள்.

காதல், கவிதை, பாடல்களும்
கைவரப்பெற்ற கலைஞர் அவர்.
அவர் பாடி நீங்கள் பார்த்ததுண்டா!
நாங்கள் பார்த்தும், கேட்டும்
மகிழ்ந்திருக்கின்றோம்!

அவரது தலைமையின் கீழ்
சண்டையில்லை! சச்சரவில்லை!!
எவரையும் ஒதுங்கிப் போக விட்டதில்லை!
ஓரம் கட்ட நினைத்ததில்லை.

இன்றைய காலகட்டம்
அதற்கெல்லாம் விதிவிலக்கு.

ஞானகுரு, ஞானத்தந்தை
என்ற சொல்லாடல் இவருக்குச்
சும்மா வந்ததில்லை,
ஞானையா என்ற பெயரை வைத்தும் வந்ததில்லை.  உண்மை.  அது
உண்மையான உண்மை. இயற்கை
அந்த உண்மையை பெயரிலும் இணைத்தது தான் விந்தை!

தொலைத் தொடர்பில் மிகப்பெரிய
ஒன்பது சங்கங்களை ஒன்றிணைத்து
அதை NFPTE என்றழைத்து
சங்க வரலாற்றில் மாற்றத்தை
உருவாக்கிய குப்தாவுக்கு
ஆற்றலாய் நின்ற அருந்தலைவன் சொக்கத் தங்கம் ஞானையா!
60 களின் போராட்டங்கள்
அடுத்தடுத்த உத்திகள்
அரசையே கலக்கியது.
அன்று தொடங்கிய வெற்றிகள்தான்
சங்கத்தின் பாதையானது.

மனித குல விடுதலைக்காக
போராடிய அந்த மாமனிதர் இன்று நம்மிடமிருந்து முழுமையாக
விடைபெறுகிறார்.
அவரது சிந்தனைகளை,
சீரிய கருத்துக்களை
செயலில் காட்டுவோம்.
நாமும், நமது மக்களும்
செயலூக்கம் பெறுவோம்.  இதுவே
நம் தலைவனுக்கு
நாம் செலுத்தும் ஞானாஞ்சலி!

மாவட்ட சங்கம்